Category: தித்திக்கும் தமிழ்


love மூடன் மட்டுமே நம்புவான் என்று எண்ணிய என்னிடம் கண்ணாடியில் என் முகம் காட்டி சிரித்த ஒன்று… காதல்..

என்னிடம் நீ பேசும் முன்பே ஆயிரம் முறை நான் பேசிவிட்டேன் என் நினைவில் பதிந்த உன் பிம்பத்துடன்….

நீ செய்யும் சிறு அசைவுகளும் அழகாய் தோன்றும்… என்னவனாய் நீ வேண்டும் என்று எண்ணுகையில்…

நீ என்னை பார்க்கும் பார்வையில் உறைந்து போன என் உலகத்தில் நான் சிலிர்ப்புடன் நின்ற நாட்கள் பல ..

என் தோழிகளிடம் கேட்டு பார்.. என் பார்வையில் நீ யாரென்று தெரிய.. உன் மேல் நான் கொண்ட மோகம் புரிய…

உன்னை பற்றி உனக்கே தெரியாத பல விஷயங்கள் நான் அறிவேன்… எனக்காக நீ எதையும் செய்வாய் என்பதில் பெருமையும் கொள்வேன்..

உன்னிடம் பேசிய முதல் வார்த்தை.. உன்னோடு மேற்கொண்ட முதல் பயணம்.. உன்னுடன் பகிர்ந்த முதல் முத்தம்.. அனைத்தும் எனக்கு காவியமே..

இருபது வருடங்களாய் நான் கண்ட கனவுகளை நொடியில் மாற்றிக்கொள்ள தயங்கவில்லை… நீ என் அருகில் வாழ்நாள் வரை இருப்பாய் என்பதினால்..

உன்னோடு காணும் உலகம் ஏனோ சற்று கூடுதல் அழகாக தெரிகிறது.. அதில் நீயும் நானும் ஒன்றாக இருப்பதினாலோ?

காதல் ஒரு மாயை என்பார்கள் பலர்… அது உண்மையாக இருந்தாலும் பரவாயில்லை நீ எந்தன் மாயாவியாக இருக்கும் வரை…..

Advertisements

A lonely journey

வருடங்கள் பல பார்த்த அன்பானது நொடியில் மறைந்ததே

மாறாதது மாற்றம் என அறிந்தும் கண்களில் நீர் வழிகின்றதே

நடப்பதை உணர்ந்தும் மனமானது மறுப்பது மாறவில்லையே

பிடித்தாலும் பிடித்தலில் பயனில்லை என்பதனாலோ…?

 

செய்த விஷயங்கள் எல்லாம் நினைவில் இருக்கின்றதே

செய்யாமல் விட்டதை எண்ணி மனம் வருந்துகிறதே

இன்னும் செய்ய ஆசைப்படுவதை என்ன செய்வேன்

காலம் இருக்கு என்று நினைத்தது எம் பிழையோ?

 

கருணையின் உருவம் நீயெனில் உம் கருணை எங்கே

அன்பை வைத்து நீ விளையாடும் விளையாட்டு இதுவோ

உலகில் உள்ளவை அனைத்திற்கும் மேலானவன் நீ

இருப்பினும் இந்த ரணத்தை ஏற்படுத்துவது ஏனோ..?

காலங்கள் கரைந்தோடினாலும் எண்ணங்கள் மறைவதில்லை
சிறந்த நினைவுகளை மனம் நித்தம் நினைக்கிறது
சிந்தனைகள் பக்குவமாயினும் ஏக்கங்கள் குறைவதில்லை
அதனோடு அந்நொடியில் ஆசைகளும் சேர்ந்துகொள்கிறது…

எண்ணுவதெல்லாம் நடக்க வேண்டும் என்றில்லை
மீண்டும் நிகழட்டுமே அத்தருணத்தின் சிலிர்ப்பு
நம்மிடம் இருப்பதில்  குறைகள்  ஏதுமில்லை
ஆனாலும் எதையோ இழந்த பரிதவிப்பு …

சில நிமிடங்கள் நாம் மௌனமாகிறோம்
நடந்ததை நினைத்தும் நடப்பதை குறித்தும்..
சிந்தையின் எண்ணங்களோடு ஒன்றாகிறோம்
அதன் சாட்சியாக விழியின் ஈரம்…!!!

எத்தனையோ முறை நாம் ரயிலில் பயணிக்கிறோம்.. ஒவ்வொரு முறையும் நம்முடைய பயண நோக்கம் போலவே நமது எண்ணங்களும் மாறிட தான் செய்கிறது… அது நமக்கு மட்டும் அல்ல நம்முடன் பயணம் செய்யும் பலருக்கும் அவ்வாறே இருக்கும்.. ஆனால் தற்பொழுதைய காலக்கட்டத்தில் நகரங்களில் வசிக்கும் பலருக்கு மின் தொடர் வண்டி பயணம் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது..  அதனோடு ஏற்படும் பந்தம் பிரிக்கமுடியாத ஒன்றாய் மாறுகிறது.. அந்த பயணம் எனக்கும் அமையும் சில நேரங்களில்.. அந்த மாதிரி ஒரு முறை பயணிக்கும்பொழுது நான் நினைத்தது.. அதை பதிவு செய்ய வேண்டுமென்று…

அந்த இருபது நிமிட பயணத்தில் எத்தனை விதமான மனிதர்களை சந்திக்க நேருகிறது… மனித உணர்வுகளை உணர முடிகிறது.. ஒவ்வொருவர் முகத்திலும் தென்படுகிறது  வேற்றுமை.. சிலர் முகத்தில் பொலிவு.. சிலர் முகத்திலோ கவலை.. அதுவே மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சி.. சிலருக்கோ ஒரு படபடப்பு.. சிலர் ஏதோ சிந்தனையில் பயணிக்க.. சிலர் காதல் வயப்பட்ட இனம் புரியாத ஆனந்தத்தில்…  ஒருப்புறம் ஒரு பெண் அவளுடைய காலை உணவை விரைவாக சாப்பிடுகிறாள் அதுவே மறுப்புறம் இன்னொருதியோ ஒரு புத்தகத்தை  பொறுமையாக புரட்டுகிறாள்.. சந்தோஷம்.. துயரம்.. துடிப்பு.. மிரட்சி.. வறுமை.. அருவருப்பு என்று எத்தனையோ எண்ணற்ற எண்ணங்கள் சூழ்ந்து இருக்கும் நிலையில் கதவோரமாக அமர்ந்து இருக்கும் பெண்மணிக்கோ உறக்கம் அதன் ஆசை வலையை விரிக்கிறது… எல்லோரும் கூண்டில் அடைத்தாற்போல் பயணிக்கும் அந்த நேரத்தில் ஒரு ஒற்றுமையை கூட உணர முடியும்.. என்னதான் அடுத்து நிற்கும் இடத்தில் இந்த பயணம் முடிந்தாலும் எண்ணங்கள் முடிவதில்லை..

வேகமாக ஓடுகின்ற வாழ்க்கையில் இறுதியாக எதைத்தான் ரசிக்கிறோம் என்று தோனுகிறது சில நேரம்.. பயணிக்கும் இருபது நிமிடங்களில் நம் மனதில் எண்ணற்ற சிந்தனைகள்.. அதே நேரத்தில் பல முறை  கைக்கடிகாரத்தை பார்த்துகொள்கிறோம்… எப்பொழுது இதில் அமைதி கிடைக்கும்??..  ஒரு முறை பயணிக்கும்பொழுது உங்கள் தனிப்பட்ட எண்ணங்களை ஒதுக்கி வைத்து உங்களை சுற்றி இருப்பவர்களை கவனியுங்கள்.. ஒவ்வொருவரின் முகமும் பல கதைகள் கூறும்.. அதன் பிறகு அதை சிந்திக்கையில் சிறு புன்னகை பிறக்கும்…

சின்னஞ்சிறு கண்களில் கலக்கங்கள் ஏனோ
விண்ணையும் தொட உன்னால் முடியும்
உன்னருகே கைகொடுக்க  தோழர்கள் இருக்க
சிந்தையில் சற்று சலனங்கள் ஏனோ…

விழிகளில் என்றும் வேண்டாமே ஈரம்
அதனால் மாறாதே உன் துயரம்
காயங்கள் காலப்போக்கில் மாறிடுமே
ஆனால் கனவுகள் என்றும் மாறாதே..

நினைத்ததை அடையும் தருணம் வரும்
அதுவரை சற்று கலங்காதிரு மனமே
எண்ணியதை எட்டிட மனம் துடிக்கும்
நோகாதிரு.. வெற்றி உமதே..!!

நிறைய நினைவுகள் என்றும் நம்மை புடை சூழும்

ஆனால் சில தருணங்கள் மட்டுமே கொஞ்சம் நீளும்

ஏனோ சில வினாடிகள் மனம் அதை அசைப்போடும்

திரும்பி வாழ நினைக்கும் நொடிகளாய் அது மாறும்..

 

சில நேரங்களில் உண்மையை மனம் அறியாது

அறிந்தாலும் அது ஏனோ ஏற்க்க முடியாது

அந்த நேரத்தில் எல்லாம் நன்றாகவே தோன்றியது

இன்று ஏனோ சற்று வேறாக தெரிகிறது…

 

எப்பொழுதும் என்ற அர்த்தம் இன்று மாறுகிறது

எதிர்காலம் வெவ்வேறு திசைகளில் அழைக்கிறது

நாடுகள் பல கடந்தாலும் பிரியாதது அன்பானது

எங்கோ ஒரு நொடியில் சற்றே தொலைந்து போனது…!!!